சைதாப்பேட்டை: ரேஷன் கடையில் கொரோனா நிதியை திருடி நண்பர்களுக்கு பகிர்ந்த மாற்றுத்திறனாளி

சைதாப்பேட்டை: ரேஷன் கடையில் கொரோனா நிதியை திருடி நண்பர்களுக்கு பகிர்ந்த மாற்றுத்திறனாளி
சைதாப்பேட்டை: ரேஷன் கடையில் கொரோனா நிதியை திருடி நண்பர்களுக்கு பகிர்ந்த மாற்றுத்திறனாளி
Published on

சைதாப்பேட்டையில் ரேஷன் கடை பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த கொரோனா நிதி ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு, கொள்ளையடித்த ரேஷன் பொருட்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த மாற்றுத்திறனாளி திருடனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 15ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் 1வது தெருவில் அருகருகே உள்ள இரு ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் கடை பூட்டை உடைத்து 7.36 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பாளர் குணசேகரன் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். மேலும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ரேஷன் பொருட்களுடன் நபர் ஒருவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த நபர் புறநகர் ரயில் ஏறி காஞ்சிபுரத்தில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருக்கும் போலீசார் உதவியுடன் கொள்ளையனை தேடிவந்தனர். சிசிடிவி காட்சிகளை உள்ள புகைப்படங்கள் வைத்து விசாரணை நடத்தியபோது, ஏற்கனவே காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி என்பது தெரியவந்துள்ளது. கோபி மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் கோபி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதும், பிராட்வேயில் பகுதியில் காகிதம் சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்துவருவதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பிராட்வேயில் கோபி வேலைபார்க்கும் இடத்திலும், தங்கும் இடத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, மடக்கி பிடித்தனர்.

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக கோபி இருப்பதால், சைகை மொழி பேசும் ஆசிரியர்களை வைத்து விசாரணை நடத்தினர். கோபியிடம் விசாரணை செய்ததில் கொரோனா காலத்தில் உணவுப்பொருளுக்காக சைதாப்பேட்டை ரேஷன் கடையை உடைத்து திருட முற்பட்டபோது லட்சக்கணக்கில் பணம் இருந்ததால் அதையும் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து 4 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்த ரேஷன் பொருட்களை தன்னுடன் வேலை பார்க்கும் ஏழை நண்பர்களுக்கு பகிர்ந்து அளித்ததும் தெரியவந்துள்ளது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக கோபி இருப்பதால், விசாரணைக்குப் பிறகு கோபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com