கோவை தென்னமநல்லூர் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த நபரொருவரை, அப்பகுதி மக்கள் கோபத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் 9 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னமநல்லூர் பகுதியில் உள்ள மணி என்பவர் தோட்டத்துக்குள் நேற்று இரவு (11.01.2022) மூன்று வடமாநில இளைஞர்கள் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மணி மற்றும் அவரது மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி உள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மணி, அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சத்தம் போட்டு அழைத்துள்ளார். அதைக்கேட்ட அருகில் இருந்த நபர்கள், கொள்ளையடிக்க முயன்றோர் கையும் களவுமாக பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது 3 திருடர்களில் இருவர் தப்பி செல்லவே, அனைவரும் மீதமொருவரை கட்டிப்போட முயன்றுள்ளனர். தப்பிக்க முடியாமல் சிக்கிய அவரை, ஒருகட்டத்தில் கட்டி வைத்து அப்பகுதி மக்கள் அடித்துள்ளனர். இதனையடுத்து சுயநினைவு இழந்து மயக்க நிலைக்கு சென்ற அந்த இளைஞர், தொடர்ந்து உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின்னர் இன்று காலை சித்திரை சாவடி நொய்யல் ஆற்று பகுதியில் ஆணின் உடல் மிதப்பதாக ஆலந்துறை காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆலந்துறை காவல்துறை மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில், பிணமாக மீட்கப்பட்ட நபர் மணி என்பவர் தோட்டத்துக்குள் திருட முயன்றபோது அடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அடையாளம் தெரியாத ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் அகப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: வேலூர்: தண்டவாளத்தில் தவறிவிழுந்த கைக்குழந்தை; போராடி காப்பாற்றிய தாய்