மகன் வாங்கிய கடனை தாயிடம் கேட்டு பிரச்னை செய்து தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய் உயிரிழந்த சம்பவம் கடலூர் பெண்ணாடத்தில் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தை சேர்ந்த செந்தில் என்பவர் பெண்ணாடத்தில் உள்ள ராணி மங்கம்மா சாலையில் வசித்து வருகிறார். வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் வியாபாரத்திற்காக முதலீடு செய்வதற்கு தனது நண்பர்களிடம் பணம் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு பெண்ணாடத்தில் இருந்து வெளியூர் சென்று விட்டுள்ளார். மேலும் செந்தில், திருமலை அகரத்தை சேர்ந்த பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓட்டுநர் சண்முகம் (39), என்பவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்த சண்முகம், வெளியூர் சென்ற செந்திலின் வீட்டிற்கு சென்று அவரது தாய் பவுனாம்பாள் (70) இடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி செந்தில் வீட்டிற்கு சென்ற சண்முகம் பவுனம்பாளிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாகவும், அவருடன் சண்முகத்தின் மனைவி சாந்தி (30), சண்முகத்தின் தங்கை ரத்னா (29) ஆகியோர் சேர்ந்து பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பவுனாம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பவுனாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் சண்முகம், அவரது மனைவி மற்றும் தங்கை மீது கொலை மிரட்டல் மற்றும் ஆயுதத்தால் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் உயிரிழந்தார். இதனால் கொலை மிரட்டல் மற்றும் ஆயுதத்தால் தாக்கிய வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக உள்ள சண்முகம், சாந்தி மற்றும் ரத்னா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.