ரூ.100 பேடிஎம் பரிவர்த்தனையை வைத்து ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த கும்பலை கைது செய்திருக்கின்றனர் டெல்லி போலீசார்.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் நான்கு பேர் போலீஸ் போல நடித்து இரு கூரியர் நிறுவன அதிகாரிகளிடம் நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர். கூரியர் ஊழியர்களின் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசிய அவர்கள் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார் முதலில் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் கடந்த இரு வாரங்களாக கூரியர் நிறுவன ஊழியர்களை பின்தொடர்ந்து உள்ளது தெரியவந்தது. அவர்களில் ஒரு திருடன் ஒரு டாக்சியை நிறுத்தி ஏதோ பேசியுள்ளார். பின்னர் டாக்சி டிரைவரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கியுள்ளார். டாக்சி ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்த திருடன் செல்போனை பயன்படுத்தியது பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக போலீசார் அந்த டாக்சி டிரைவரை கண்டுபிடித்து விசாரித்ததில், அவருக்கு 100 ரூபாயை பேடிஎம் மூலம் அனுப்பிவிட்டு ரொக்கமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து பேடிஎம் தலைமையகத்தைத் தொடர்பு கொண்ட போலீசார் குற்றவாளியின் செல்போன் எண்ணைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் அந்த குற்றவாளியின் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்தனர்.
இதையும் படிக்க: சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததில் தகராறு! சமாதானம் செய்ய சென்றவர் குத்திக்கொலை!