தஞ்சாவூரில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் டூ மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக பெற்றோர் சந்தேகம் ஏதும் முன்வைக்கவில்லை என்பதால் மறு உடற்கூராய்வுக்கு அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவேண்டும் என பெற்றோருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடகோரி மாணவியின் தந்தை முருகானந்தம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரிக்கப்பட்டது. அப்போது, பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக மாணவி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதாகவும், வீடியோவை பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை காவல் கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. தொடர்புடைய வார்டன் சகாய மேரி ஜனவரி 18ஆம் தேதியே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியை மதம் மாறச்சொன்னது குறித்து அவரின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்தாரா என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். அது குறித்து விசாரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர்கள் இல்லை என கூறியதையடுத்து மறு உடற் கூராய்வு தேவையில்லை என நீதிபதி தெரிவித்தார். மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் நாளை மாணவியின் தந்தையும், தாயும் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகி தனது மகள் தன்னிடம் தெரிவித்தவை குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார். அதனை பதிவுசெய்து தஞ்சை நீதித்துறை நடுவர் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும், மாணவியின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும் எனவும், அவற்றில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.