கோவையில் தனியார் பள்ளியில் பயின்றுவரும் மாணவன் இறுக்கமாக உடை அணிந்திருந்ததால் ஆசிரியர் ஒருவர் கடுமையாக அடித்ததில் மாணவன் காயம் அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் கணபதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று காலை 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளியில் கொடுக்கப்பட்ட சீருடையை ஆல்ட்டர் செய்து இறுக்கமாக அணிந்து சென்றிருக்கிறார். சீருடை இறுக்கமாக அணிந்திருந்ததால் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சன் வகுப்பறையில் வைத்து கடுமையாக அடித்திருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் அடித்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருகிலிருந்த வகுப்பு ஆசிரியை ஒருவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். வீட்டிற்குச் சென்ற மாணவனுக்கு இரவு தலை மற்றும் காதில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் விசாரித்ததில் ஆசிரியர் கடுமையாக அடித்தது தெரியவந்தது. ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தபிறகு மாணவனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். மாணவனுக்கு தலை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.