ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவ மாணவியருக்கு கூகுள்பே மூலம் பணம் பெற்று கஞ்சா விற்பனை செய்து வந்த 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைடுத்து அங்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
இந்நிலையில், அவர்கள் வைத்திருந்த பையில் சுமார் 2கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனாஸ் ரூட் (33), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்புகுமார் (26) என்பதும், இவர்கள் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டோர் இவர்களது வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இதில் சிலர் பெண் வாடிக்கையாளர்கள் என்றும் கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறிய தகவல் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.