ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. சென்னையில் கடந்த ஆறுமாதத்தில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமான தொகை ஆன்லைனில் திருடப்பட்டுள்ளது அதில் தெரியவந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் புள்ளி விவரப்படி, 2016-ஆம் ஆண்டில் 898 கிரெடிட் கார்டு மோசடிகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 209 புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டுகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டு 852 மோசடி புகார்களும், நடப்பு ஆண்டில் இதுவரை 1106 புகார்களும் பதியப்பட்டுள்ளன. ஆன்லைனில், கடந்த ஆண்டு 531 பண மோசடிகள் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 175 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓடிபி எண் பரிமாற்றம் செய்த விதத்தில் கடந்த ஆண்டு 1840 மோசடி புகார்களும், இந்த ஆண்டு இதுவரை 1315 புகார்களும் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் வங்கி பணபரிவர்த்தனை மோசடிகளில் கடந்த ஆண்டு 16 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவுக்கு திருடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 7 கோடியே 15 லட்சம் ரூபாய் வரை திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி கர தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற மோசடிகளில் புகார் அளிப்பவர்கள் வெறும் 9 சதவிகிதம் என்பதே மற்றொரு அதிர்ச்சி தரும் விவரமாக இருக்கிறது. சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வங்கி ஆன்லைன் மோசடிகளில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளை பொறுத்தவரை பாதுகாப்புடன் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, வேலை தொடர்பான மெயில்கள், திருமண தகவல் வலைதளங்களில் பணம் செலுத்துதல், தனி நபர் லோன் குறித்த போலி அழைப்புகள், மெசேஜ்கள் இது போன்ற எந்த ஒரு தகவலையும் நம்பக்கூடாது என்று காவல்துறையினரும், வங்கியாளர்களும் அறிவுறுத்தினர்.