கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் ஒரு சமூக செயலியில் காணப்பட்ட பதிவின் மூலம் முதலீடாக சுமார் 9 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரது செயலியில் 32 லட்சம் ரூபாய் இருப்பதாக காண்பித்துள்ளது. பணத்தை எடுப்பதற்கு அவர் முயன்றபோது, மேலும் பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் தாமரைக் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், மோசடி கும்பல் ராஜஸ்தானில் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் ஜோத்பூர் சென்று மோசடியில் ஈடுபட்ட கிஷன் சௌத்ரி, சுனில் சரண், சந்தீப் குமார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் சந்தீப் உட்பட இருவருக்கு பல்வேறு வங்கிகளில் 11 கணக்குகள் இருப்பதும், அவற்றின் மூலம் புகார்தாரரின் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது. கைதானவர்களின் வங்கிக் கணக்குகளில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.