ஆன்லைன் கடன் செயலியில் சிக்கியவரா? முதலில் இதை செய்யுங்கள்.. - சைபர் க்ரைமின் எச்சரிக்கை

ஆன்லைன் கடன் செயலியில் சிக்கியவரா? முதலில் இதை செய்யுங்கள்.. - சைபர் க்ரைமின் எச்சரிக்கை
ஆன்லைன் கடன் செயலியில் சிக்கியவரா? முதலில் இதை செய்யுங்கள்.. -  சைபர் க்ரைமின் எச்சரிக்கை
Published on

ஆன்லைன் கடன் செயலி எனும் சிலந்தி வலையில் பூச்சிகளாய் சிக்குவது எப்படி?

ஆன்லைன் கடன் செயலிகள் வாயிலாக கடன் பெறுவோர் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் தமிழகத்தில் பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட போதிலும் இந்த மர்ம நபர்களின் நடவடிக்கைகள் தொடர்கதையாகவே உள்ளன. முடிந்தவரை பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதே சைபர் கிரைம் கொடுக்கும் அறிவுரையாக உள்ளது.

"ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரிடம் கருணை எதிர்பார்க்கக்கூடாது; அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும்" என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் தத்துவ வசனத்தைப் போல ஆசையால் ஆன்லைன் சிலந்தி வலையில் சிக்கித்தவிப்போரின் எண்ணிக்கை தொடர்கதையாகவே உள்ளது.
 

பொதுவாக கடன் பெற நகைகள் சொத்துக்கள் போன்றவற்றை அடகு வைப்பது வழக்கம். ஆனால் தங்களிடம் உள்ள தொடர்பு விவரங்களை அடகுவைத்து பெறுவதே ஆன்லைன் கடன். சொத்து ஆவணங்களையும், நகைகளையும் அடகு வைத்து கடன்பெற்ற கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவற்றை மட்டுமே இழக்க நேரிடும். ஆனால், தொடர்பு விவரங்களை வைத்து கடன் பெற்றவர்கள் 7 நாட்களுக்குள் திரும்ப செலுத்தாவிட்டால் மானத்தையும், இன்னுயிரையும் இழப்பதும் அவர்கள் சார்ந்த குடும்பமே சிதைந்து போவதுமான நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இப்படித்தான் சேலத்தைச் சேர்ந்த இளைஞர் விஷ்ணுப்பிரியன் என்பவரும் தனக்கே தெரியாமல் இந்த மாயக் கூட்டத்தின் வலையில் சிக்கித் தவிக்கிறார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த புளியம்பட்டி பகுதியை சேர்ந்த விஷ்ணுப்பிரியன் என்பவர் டிப்ளமோ முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக சுய தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்து வந்த மெசேஜில் விஷ்ணுப்பிரியன் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற தகவலும் அந்த செயலியில் உள் நுழைந்து பார்த்தால் விவரங்கள் தெரியவரும் என்றும் தகவல் வந்துள்ளது. இதனைக் கண்டு விஷ்ணுப்பிரியன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே அடுத்தடுத்து வந்த வாட்ஸ் ஆப்  அழைப்புகளில் தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர்கள் உடனடியாக கடன் தவணைத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.

சம்பந்தமே இல்லாத தனக்கு வந்த அழைப்பால் குழப்பமடைந்த விஷ்ணுப்பிரியன் செய்வது அறியாது திகைத்து உள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. தொடர்ந்து அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய மர்ம நபர்கள் உடனடியாக பணத்தை செலுத்துமாறு மெசேஜ் அனுப்பி உள்ளனர். இதற்கு விஷ்ணுப்பிரியன் பதில் அளிக்காத நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது சமூகவலைத்தள தொடர்பில் உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்த ஆபாச படமும் அவரைப் பற்றிய தவறான தகவல்களும் சென்றுள்ளன. இதனால் மிகுந்த வேதனை அடைந்த விஷ்ணுப்பிரியன் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து புகார் அளித்தார். இது போன்று கடன் செயலிகளில் சிக்கும் இளைஞர்கள் உட்பட யாராக இருந்தாலும் முதலில் தைரியமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எளிதாகக் கிடைக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அது ஏடாகூடமாக நம்மை சிக்க வைத்து விடும் என்பதை ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோரும் செயலிவழி தேடல்களை கொண்டோரும் புரிந்து கொண்டு எவற்றையும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்பதும் சைபர் க்ரைம் போலீசாரின் எச்சரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்கலாம்: ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்.. ஆன்லைன் கடன் கும்பலின் அட்டுழியத்தால் இளைஞர் தற்கொலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com