மதுரை ஆவின் நிறுவனத்தில் 30 கோடி ரூபாய்க்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி, திருப்பதிக்கு நெய் அனுப்பியதாக கூறி தனியார் நிறுவனங்களுக்கு நெய் விற்று மோசடி என ஆவின் நிறுவனம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்துள்ள நிலையில், வைப்புத் தொகை மூலம் தரமற்ற இயந்திரங்களை வாங்கி மோசடி செய்திருப்பதாக புதிய புகார் எழுந்தது. இதையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் தலைமையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் ஆய்வு நடைபெற்றது. அதில் ஏற்கெனவே மதுரை ஆவின் நிறுவனத்தின் பால் டப்பாக்களை முறைகேடாக வெளியே எடுத்துச் சென்று பால் விற்பனை செய்வதை கண்டறிவதற்காக, கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 5,000 டப்பாக்களில் பொறுத்தப்பட்ட எலக்ட்ரானிக் சிப் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அந்த சிப் யாவும் பொருத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை அவை செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகளும் இதுவரை பயன்பாடின்றியே இருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை கப்பலூரில் 13 கோடி ரூபாய்க்கு தொடங்கப்பட்ட சோலார் திட்டத்தின்கீழ் இதுவரை மின் உற்பத்தி தொடங்கவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது. கொரோனா காலகட்டத்தில் தணிக்கைகள் நடைபெறாததை சாதகமாக பயன்படுத்தி தரமற்ற இயந்திரங்களை வாங்கியதன் மூலம், பல்வேறு திட்டங்கள் முடங்கி கிடப்பதும், 30 கோடி ரூபாய் வைப்புத் தொகையை வீணாகியதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி