திருச்செங்கோடு குழந்தை விற்பனை புகார்: மேலும் ஒரு இடைத்தரகர் கைது
திருச்செங்கோடு குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகஜோதிக்கு கடந்த 7ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் நாகஜோதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு மருத்துவராக பணியாற்றிய அனுராதா, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாளை மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும், 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், குழந்தையை தங்களிடம் தருமாறும் பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து நாகஜோதி தம்பதியர், ஆட்சியர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாளை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மருத்துவர் அனுராதா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேலும் ஒரு இடைத்தரகரான குமாரபாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளிக்கும் தகவலின் பேரில் மேலும் கைது நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.