சென்னை கேகே நகரில் தனியாக வசித்துவந்த மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கேகே நகர் பாரதிதாசன் காலனியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீதாலட்சுமி (78). இவரது கணவர் குருமூர்த்தி கடந்த ஆண்டு இறந்து விட்ட நிலையில் சீதாலட்சுமி தனியாக வீட்டில் வசித்து வந்தார். மூதாட்டியின் மகள் புவனேஸ்வரி வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகன் சிவக்குமார் அடையாறு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகள் புவனேஷ்வரி தாயார் சீதாலட்சுமிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, எடுக்காத காரணத்தினால் எதிர்வீட்டில் வசித்துவரும் ரிதீஷ் என்பவருக்கு தகவல்கூறி வீட்டை சென்று பார்க்கும்படி கூறியிருக்கிறார். உடனே ரிதீஷ், சீதாலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்திருக்கிறது. தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்றபோது மூதாட்டி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரிதீஷ், உடனடியாக அவரது மகன் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் மூதாட்டி சீதாலட்சுமி தலையணை வைத்து அழுத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடத்த வீட்டிற்கு அவரது மகன் சிவக்குமார் வந்தவுடன், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கழுத்தில் மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின், கையில் அணிந்திருந்த 8 தங்க வளையல்கள் என 16 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொலை நடந்த வீட்டிற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் எந்த வழியாக வந்தனர்? எப்படித் தப்பிச் சென்றனர்? என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்களால் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சீதாலட்சுமி வீட்டிற்கு முன்பு உள்ள பூங்காவில் எப்போது நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவரை கண்காணித்த யாராவதுதான் இதை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.