ஆர்டிஐ-ல் தகவல் கேட்டவருக்கு போனில் மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்! வைரலாகும் ஆடியோ

ஆர்டிஐ-ல் தகவல் கேட்டவருக்கு போனில் மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்! வைரலாகும் ஆடியோ
ஆர்டிஐ-ல் தகவல் கேட்டவருக்கு போனில் மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்! வைரலாகும் ஆடியோ
Published on

கோவில்பட்டியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டவருக்கு, அந்த பகுதியில் உள்ள முன்னாள் கவுன்சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்கத்தின் நிறுவன தலைவராக இருந்து வருகிறார். செண்பகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குறித்தும், அதனை செயல்படுத்தும் தனியார் நிறுவனம் குறித்த தகவல்களை கேட்டு மனு செய்துள்ளார்.

இந்நிலையில், செண்பகராஜ் செல்போனிற்கு முன்னாள் கவுன்சிலர் ராஜ்பாண்டியன் என்று கூறிக் கொண்டு ஒருவர் தொடர்பு கொண்டு நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் குறித்து கேட்டுள்ளார். இனிமேல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குறித்தோ, அதனை செயல்படுத்தும் நிறுவனம் குறித்தோ எந்த கேள்வியும் கேட்க கூடாது. அந்த நிறுவனத்தினை நடத்துபவர் தனது உறவினர் என்றும், தன்னைப்பற்றி எங்கு சென்று கூறினாலும் பரவாயில்லை என்றும், நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையர், சுகாதார பிரிவு அதிகாரிகள் ஒன்றும் யோக்கியம் கிடையாது லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதைப்பற்றி இனியும் எதுவும் கேட்க கூடாது என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

செண்பகராஜை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தன்னை மிரட்டியது தொடர்பாக செண்பகராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து செண்பகராஜ் வழக்கறிஞர் பீமாராவ் கூறுகையில், ”நகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து கேள்வி கேட்பவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளே வெளியே கொடுத்து, தகவல் கேட்டவர்களை மிரட்டும் செயல் நடைபெற்று வருவகிறது. இது குறித்து காவல் நிலையம், மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் விபரங்களை வெளியே கொடுப்பது சட்டப்படி தவறு, அதையும் மீறி கொடுத்து மிரட்ட சொல்லியுள்ளனர். தகவலை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட போது இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com