இன்டர்நெட்டில் ஏழு மாதமாக படித்து, தானே குண்டு தயாரித்து மணமகனை கொன்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலிங்கர் நகரத்தைச் சேர்ந்தவர் சவுமியா சேகர். சாஃப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு ரீமா என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி திருமணம் நடந்தது. பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிலையில் 23-ம் தேதி திருமண பரிசாக ஒரு பார்சல் வந்தது. அதைத் திறந்து பார்த்தபோது உள்ளிருந்த இரண்டு குண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் மணமகன் சவுமியா சேகரும் அவரின் பாட்டி ஜெமாமணியும் பலியாயினர். புதுப்பெண் ரீமா படுகாயமடைந்தார்.
இதுபற்றி போலீசார் விசாரித்து வந்தனர். துப்புக் கிடைக்காமல் திணறி வந்த அவர்கள், ரீமாவின் வீட்டுக்கு அருகில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதோடு 6 பேரிடம் விசாரித்து வந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பேராசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் பலியான சவுமியாவின் தாய் சஞ்சுகா, புஞ்சிலால் மெஹர் என்பவருக்குப் பதிலாக, அவர் வேலை பார்க்கும் கல்லூரியின் பிரின்சிபல் ஆனார். இதனால் மெஹருக்கு பொறாமை. சஞ்சுகாவின் குடும்பத்தை கொல்ல முடிவு செய்தார். இதற்காக இணையத்தில் குண்டு தயாரிப்பது எப்படி என்று ஏழு மாதமாக தேடி படித்துள்ளார். பின்னர் சின்ன சின்ன குண்டுகளை தயாரித்து சோதனை செய்துள்ளார். அது ஒர்க் அவுட் ஆனதும் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரித்து திருமணப் பரிசாக அனுப்பியுள்ளார். போலீசார் விசாரணையின் போது இதைக் கூறியுள்ளார் மெஹர்.
பேராசிரியர் ஒருவரே இப்படி செயல்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.