ஓடும் ரயிலில் ஏசி பெட்டிகளில் உள்ள கழிவறையில் உள்ள பைப்களை பல நாட்களாக திருடி வந்த கொள்ளையனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கருப்பு தோல் பையை அணிந்து கொண்டு வாலிபர் ஒருவர் சுற்றித் திரிந்து உள்ளார். அதன்பின், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்த உடன் வேகமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயன்றுள்ளார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நுழைவாயிலில் சந்தேக வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய அலி ஹோசோன் என்பது தெரியவந்தது. அவர் கையில் வைத்திருக்கும் பையை போலீசார் சோதனையிட்டபோது கழிவறைகளில் மற்றும் பாத்ரூம்களில் பயன்படுத்தப்படும் பைப் பொருட்கள் இருந்துள்ளன.
இந்த பொருட்களை ஆய்வு செய்தபோது ரயில்களில் ஏசி பெட்டி கழிவறைகளில் பயன்படுத்தப்படும் பைப் பொருட்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரயில் நிலையங்களில் ஏசி பெட்டிகளில் ஏறி டிக்கெட் பரிசோதகர் பயணிகளை டிக்கெட் பரிசோதனை செய்யும் பொழுது கழிவறைகளில் உள்ள பைப் பொருட்களை இந்த வாலிபர் திருடி வந்தது தெரிய வந்துள்ளது.
பைப் பொருட்களை திருடும்போது தண்ணீர் வெளியில் வராமல் இருக்க கட்டைகளை வைத்து பைப்பை அடைத்து விட்டு திருடுவதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். இதற்கான பிளம்பிங் பொருட்கள் அனைத்தையும் சந்தேகம் வராத படி தோல் பையில் எடுத்துக்கொண்டு திருடியது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஏசி ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் தரமான பைப் பொருட்கள் போடப்பட்டிருப்பதால் அதனை திருடி 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து குடி போதைக்கு உல்லாசமாக செலவிடலாம் என்று ஒரு வருடத்திற்கு மேலாக இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து 12க்கும் மேற்பட்ட பைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரயில் பெட்டிகளில் திருடிய பொருட்களை, வாங்கிய கடைகள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.