”ஹலோ மேடம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு?”-நகை பறிக்க முயன்று தர்மஅடி வாங்கிய வடமாநில இளைஞர்கள்
பழனியில், முகவரி கேட்பதுபோல் நடித்து கல்லூரி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பழனி திருநகரை சேர்ந்தவர் நாராயணன். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி முத்துக்குமாரி (வயது 34). இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். பழனி திருநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள், முத்துக்குமாரியிடம் முகவரி ஒன்றை கொடுத்து வழி கேட்டுள்ளனர். பின்னர் திடீரென முத்துக்குமாரியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அவர் திருடன்...திருடன்... என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களை விரட்டி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர்கள், பிடிக்கவந்த பொதுமக்களை தாக்கியதுடன் தப்பியோட முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையே தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த 2 பேரை மீட்டு விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அவர்கள் வடமாநில பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் யார், இதற்கு முன்பு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டு உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், தற்போது முகவரி கேட்பது போல் நடித்து நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பழனி பகுதியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர் குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.