தமிழக தேர்வுத்துறையின் போலி சான்று கொடுத்து மத்திய அரசின் பணிகளில் வட மாநிலத்தவர் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பணிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக இருப்பதால் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், இதனை தடுக்கவேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது உறுதியானது.
யு.பி.எஸ்.சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில், போலி சான்றிதழ்களை கண்டறிந்து அரசு தேர்வுகள் துறை உறுதி செய்திருக்கிறது. போலி சான்றிதழ் கொடுத்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் அரசு தேர்வுகள் துறை அஞ்சல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.