செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!

செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!
செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!
Published on

சாலையை கடக்க முயன்ற குழந்தையை கையைபிடித்து வீட்டுக்கு கொண்டு சென்று விட்ட பஞ்சு மிட்டாய் விற்பனையாளரை, குழந்தை கடத்தி செல்வதாக தவறுதலாக கருதி பொதுமக்கள் கொடூரமாக அடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், கோவை ரயில் நிலையம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பஞ்சு மிட்டாய் விற்று வரும் யோகேஷ், வார நாட்களில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து பஞ்சு மிட்டாய் விற்கிறார். பின் வார இறுதியில் கூட்டம் அதிகமாக உள்ள பந்தயச்சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சிங்காநல்லூர் பகுதியில் அடிக்கடி பஞ்சுமிட்டாய் விற்கும் யோகேஷ் அப்பகுதியில் குழந்தைகள் அடிக்கடி பஞ்சுமிட்டாய் வாங்கும் வீடுகளை ஞாபகம் வைத்து அதன்மூலம் தன் வியாபாரத்தை பெருக்கி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நான்கு வயது சிறுமியொருவர், அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க அஞ்சி சிறுமி சிரமப்பட்டிருக்கிறார். அந்தநேரத்தில் அப்பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்று வந்த யோகேஷ் சாலையைக் கடக்க முடியாமல் தத்தளித்து வந்த சிறுமியை கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் கையை பிடித்து - மிட்டாய்க்காரர் போல ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் அழைத்துச் செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுமியை அவர் கடத்தி செல்வதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பின் அவரை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் யோகேஷிடம் நடத்திய விசாரணையில், யோகேஷ் அடிக்கடி அப்பகுதிக்கு சென்று இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டை ஞாபகமாக வைத்து வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இதனையடுத்து யோகேஷை போலீசார் விடுவித்த நிலையில் யோகேஷ் இன்று வழக்கம் போல் அதே பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்று வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அதே சிறுமியை தனது தாயுடன் பந்தய சாலைக்கு வந்துள்ளார். அப்போது பஞ்சுமிட்டாய் விற்பவரை பார்த்த சிறுமி தாயிடம் பஞ்சுமிட்டாய் வேண்டும் என கேட்க, மீண்டும் யோகேஷை பார்த்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து, இதுதொடர்பாக அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனைக் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் யோகேஷை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கத் தொடங்கினர்.

தான் குழந்தையை கடத்த முயற்சிக்கவில்லை என யோகேஷ் ஹிந்தியில் கூறியும் பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர். இதுகுறித்துக் தகவலறிந்த பந்தய சாலை போலீசார் யோகேஷை மீண்டும் அழைத்துச் சென்று பொதுமக்களிடமிருந்து விசாரணை நடத்தினர். அதில் தவறான புரிதலால் வடமாநில இளைஞரான யோகேஷ் இரண்டாவது முறையாக தாக்கபட்டது தெரியவந்தது. அந்த சிறுமியின் தரப்பில் புகார் ஏதும் அளிக்கபடாத நிலையில் யோகேஷை போலீசார் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.

தவறான புரிதலால் அப்பாவி வடமாநில இளைஞரை இரண்டு நாட்கள் தொடர்ந்து பொதுமக்கள் தாக்குவதும், அவரை அடிப்பதும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தத் தவறும் செய்யாத அவருக்கு, இரண்டு நாட்களாக வியாபாரம் பாதித்ததோடு பொதுமக்களிடமும் அவப்பெயரே மிஞ்சியிருப்பது வேதனைதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com