நொய்டாவில் சரிபார்க்காமல் காணாமல் போனவரின் உடலை போலீசார் தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் யாதவ்(20). இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதர்களுடன் வசித்து வந்தார். யாதவ் ஜேசிபி இயந்திரம் இயக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்து 2 வாரங்களுகு மேல் ஆகியும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரிவு 39 காவல் நிலையத்தின் முன்பு யாதவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆகஸ்ட் 17ஆம் தேதி பிஸ்ராக் பகுதியில் தங்கள் மகனின் உடல் மீட்கப்பட்டதாக போலிஸ் அதிகாரிகளிடமிருந்து அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் பிஸ்ராக் உள்ளூர் போலீசார் மூன்று நாட்களுக்குப் பிறகு முறையாக விசாரணை செய்யாமல், சர்பார்க்காமல் யாதவின் உடலை தகனம் செய்துள்ளதும் தெரியவந்தது. பிரிவு 39 காவல் நிலையத்துக்கும் பிஸ்ரக்கிற்கும் உள்ள தூரம் எட்டு கிலோமீட்டர் மட்டுமே. இதற்கிடையில், ஆகஸ்ட் 19 அன்று, யாதவ் குடும்பத்தினர் ஏற்கனவே காணாமல் போனதாக புகார் அளித்தனர். அப்படியிருந்தும், பிரிவு 39 காவல் நிலையத்தின் உள்ளூர் காவல்துறையினர் அதன் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் இருந்து யாரேனும் மிஸ்சிங் புகார் உள்ளதா என்ற விவரங்களைப் பற்றி குறுக்கு சோதனை செய்யவில்லை. பின்னர் குடும்பத்தினர் பிஸ்ராக் காவல் நிலையத்திற்குச் சென்று சட்டபூர்வமான செயல்களைச் செய்தார்கள், ஆனால் தற்போது வரை அவர்கள் மகனின் அஸ்தியைப் பெறவில்லை.
இதுகுறித்து யாதவின் உறவினர்கள் கூறுகையில், “யாதவை காணவில்லை என புகார் அளித்துள்ளோம். ஆனால் அருகில் உள்ள காவல்நிலைத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் இரு காவல் நிலையங்களுக்கு இடையே ஒருங்கிணப்பு இல்லை” எனத் தெரிவித்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் யாதவ் எப்படி இறந்தார் என்பதையும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.