உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த நிதாரி எனும் கிராமத்தில், உயிரிழந்த பெண்களின் உடல் உறுப்புகள் சாக்கடை தண்ணீரில் அடித்து வரப்பட்டதாக கடந்த 2006ம் ஆண்டு புகார் எழுந்தது. இதனை ஃபோட்டோக்களாக எடுத்த அப்பகுதியினர், அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அப்பகுதியில் ஏற்கனவே பல பெண்கள் காணாமல் போன நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தியது போலீஸ். அப்போதுதான், சிறுமிகள் உட்பட 16 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இதில் தொடர்புடைய தொழிலதிபர் மொகிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலியிடம் விசாரித்ததில் குற்றத்தை கோலி ஒப்புக்கொண்டார். சோதனை செய்ததில் மொகிந்தர் சிங்கின் வீட்டுக்கு வெளிப்புறம் இருந்து 14 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையை முடித்த அப்பகுதி போலீஸார் வழக்கை சிபிஐ-இடம் ஒப்படைத்த நிலையில், விசாரிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2005 - 2006ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட இந்த கொலைகள் குறித்து வழக்குகள் நடந்து வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கும் 2009ம் ஆண்டில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்ட இவர்களது கருனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பின்னர் அதே ஆண்டில் டிசம்பரில் அவர்களின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் 2015ம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனை 2017ம் ஆண்டில் விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் மரண தண்டனை விதித்தது.
இருவர் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வந்ததைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், கொலைகளுக்கான போதிய ஆதாரம் இல்லாததால் இருவர் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளனர். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.