செய்தியாளர்: ஜான்சன்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் - சஜிதா தம்பதியர். இவர்களுக்கு சுபாஷினி (15), ஹர்சினி (4) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். பிரபாகரன் கடந்த 2018ம் ஆண்டு இறந்த நிலையில், சஜிதா கண்ணேரிமுக்கு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சஜிதா தனது 4 வயது குழந்தை ஹர்சினியை காணவில்லை என்று கோத்தகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹர்சினியை தேடிவந்தனர். அப்போது, சஜிதா வேலை செய்யும் விடுதியின் கிணற்றில் ஹர்சினி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அப்போதைய குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் போலீஸார் ஹர்சினியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் ஹர்சினி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கோத்தகிரி போலீஸார், சஜிதாவிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது சஜிதா, வறுமை காரணமாக குழந்தையை கொன்றதாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கம், சஜிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சஜிதா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.