மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன் 11 வயது மகளை 3 ஆண்டுகளாக பலமுறை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் (44). துணி வியாபாரியான இவருக்கு திருமணமாகி 1 ஆண் மற்றும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மனைவி இல்லாத நேரத்தில் தன் 11 வயது மகளை 3 ஆண்டுகளாக பலமுறை அப்துல் நாசர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தாயிடமோ, உறவினர்களிடமோ கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அச்சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வழி தாத்தா வீடு கேரளாவில் உள்ளதால் அங்கு சென்றுள்ளார். மீண்டும் அங்கிருந்து கூடலூருக்கு செல்லுமாறு தாத்தா சிறுமியிடம் கூறியபோது தனது தாத்தாவிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கூட்டி சென்று பரிசோதனை செய்தனர்.
சிறுமியின் உடலில் பல காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலமுறை பாலியல் தொல்லை செய்திருப்பதும் தெரியவந்தது. கடந்த 21.9.2017 அன்று கூடலூர் அனைத்து காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ,சப்-இன்ஸ்பெக்டர் சோனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சிறுமியின் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதம் விதித்து தீர்பளித்தார்.