காலாவதியானது IPC... அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

பிரிட்டிஷ் காலம் முதல் ஜூன் 2024 வரை இருந்த IPC சட்டங்கள் இன்றுமுதல் நடைமுறையில் இல்லை.. மாறாக புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன..
new laws
new lawsகோப்பு படம்
Published on

இந்தியாவில் கடந்த 1860 தொடங்கி நேற்று வரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் என மூன்று சட்டங்கள் அமலில் இருந்து வந்தன. இதற்கு மாற்றாக கடந்த 2023-ல் நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என 3 புதிய குற்றவியல் சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன் மொழிந்தது. இந்த சட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகத்தால் (MHA) ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படது. பின் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகின்றன. "அனைவருக்கும் விரைவான நீதி மற்றும் நீதியை" உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் :

  • இந்திய தண்டனை சட்டத்தில் முன்பிருந்த 511 பிரிவுகள் தற்போது 358-ஆக குறைக்கப்பட்டுள்ளன.

  • இதற்கு முன்பு ஒரு குற்றம் நடந்தால் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால் இப்போது அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு நபரும் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய புதிய குற்றவியல் சட்டம் அனுமதிக்கிறது.

  • குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.

  • காவல்துறையிடம் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்ப இந்த சட்டம் வழிவகுக்கிறது.

  • அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொளி வழியில் பதிவு செய்ய வேண்டும் என்னும் கட்டாயத்தையும் இந்தச் சட்டம் கொண்டுவந்துள்ளது.

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.

  • குழந்தையை வாங்குவதும் விற்பதும் இச்சட்டத்தின்படி கடுமையான குற்றம்.

  • பாலினம் பற்றிக் குறிப்பிடுகையில் மாற்று பாலினத்தவரும் இனி சேர்த்துக்கொள்ளப்படுவர்.

  • பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை அவரது உறவினர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் பெண் போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும்.

  • கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

  • மருத்துவ அறிக்கைகள் ஏழு நாட்களுக்குள் வர வேண்டும்.

  • திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல், கும்பலாகத் தாக்குதலில் ஈடுபடுவது, சிறுமியரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, நகை பறிப்பு போன்ற குற்றங்களுக்கு இதற்கு முன்பிருந்த இந்திய தண்டனை சட்டத்தில் விதிகள் இல்லை. ஆனால் பாரதிய நியாய சன்ஹிதாவில் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளன.

  • கைது நடவடிக்கையின்போது கைது செய்யப்படுபவர் தான் விரும்பும் ஒரு நபருக்கு தனது கைதைப் பற்றிய தகவலை அளிக்கலாம் . கைது செய்யப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் , மாவட்ட தலைமையகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும்.

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு 90 நாட்களுக்குள், தான் சம்பந்தப்பட்ட வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

  • பழைய குற்றவியல் சட்டங்களில் இருந்த தேசத் துரோக பிரிவுக்குப் பதிலாக, புதிய சட்டத்தில் தேசத்திற்கு எதிரான சதி என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா கருத்து :

இது குறித்து முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "1860-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல, தண்டனை வழங்குவது. இந்த மூன்று புதிய சட்டங்கள் மூலமாக மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் சுமையைக் குறைக்கும் வகையில் நியாயமான, காலவரையறைக்குட்பட்ட, ஆதார அடிப்படையிலான விரைவான விசாரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. விசாரணையில் தடய அறிவியல் அடிப்படையில் வழக்கு விசாரணையை வலுப்படுத்தியுள்ளோம். அதேபோல பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஆடியோ-வீடியோ முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளோம். இனி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் அசாம் வரையிலும் நாடு முழுவதும் ஒரே நீதி முறை இருக்கும்" என்று கூறியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுகோப்பு படம்

எதிர்ப்புகள் : 

“அவசரமாக நிறைவேற்றப்பட்ட” சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றம், அவற்றை மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம் என்று அவர் கூறினார்.

அதேபோல இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும் இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த சட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகத்தால் (MHA) அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேபோல தண்டனை விதிகள் எவ்வாறு காவல்துறை அதிகாரங்களை விரிவுபடுத்துகின்றன என்பது குறித்தும் அவை எப்படி சிவில் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்கின்றன என்பது குறித்தும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com