காவலர்கள் பிடிக்கமுயன்றபோது மாடியிலிருந்து கீழே விழுந்து ரவுடி மோகன்ராஜ் இறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவலர்கள் தள்ளிவிட்டதாலேயே மோகன்ராஜ் உயிரிழந்ததாக மற்றொரு ரவுடி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது தமிழ்நாடு குடிசைவாரிய மாற்று குடியிருப்பு. அங்கு பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடிகளான மோகன்ராஜ், ராசய்யா, ஜோதிபாசு ஆகியோர் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த தனிப்படையினர் நள்ளிரவில் ரவுடிகளை தேடிச் சென்றனர். குடியிருப்பின் 3ஆவது மாடியில் பதுங்கி இருந்த அவர்கள், காவலர்களிடம் இருந்து தப்புவதற்காக அருகில் இருந்து மரக்கிளையை பிடித்து கீழே குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மற்றொரு ரவுடி ராசய்யா படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையின் தகவலுக்கு மாறாக ராசய்யா வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் “காவல்துறையிடம் இருந்து தப்பிக்க மரக்கிளையில் தொங்கியபடி கீழே குதிக்க முயன்றோம். ஆனால் மரக்கிளையில் இருந்து வேண்டுமென்றே காவலர்கள்தான் எங்களை கீழே தள்ளிவிட்டனர். இதில் மோகன்ராஜ் உயிரிழந்துவிட்டான்” என தெரிவித்தார். சம்பவத்தின்போது, தப்பியோடிய ரவுடி ஜோதிபாசுவை தனிப்படையினர் தீவிரமாக தேடிவ வருகின்றனர்.