தமிழ்நாட்டில் படிப்பறிவு இல்லாத சிறுவர்களைவிட பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என என்.சி.ஆர்.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.
2019இல் 28% சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கே செல்லாத குழந்தைகளைவிட பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அதிலும் ஆதரவற்றவர்களைவிட பெற்றோருடன் வாழும் சிறார்கள்தான் இந்த குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 2019இல் மட்டும் 3,305 சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில், 2,470 பேர் ஆரம்பப்பள்ளி அல்லது இடைக்கல்வி வரை பயின்றவர்கள். படிப்பறிவே இல்லாதவர்கள் வெறும் 97 பேர்தான். அதில் 2,899 பேர் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் என அந்த அறிக்கை கூறியுள்ளது.
2018இல் 2,304 சிறார் குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில், 2019இல் 16% அதிகமாகி, 2,686 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் 2018இல் 502 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2019இல் 647 சிறார் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதாவது 28% அதிகமாகி இருக்கிறது.
ஆனால் அனைவரையும் கைதுசெய்வதில்லை என போலீஸார் கூறியிருக்கின்றனர். குற்றம் செய்தவர்களில் 2099 பேரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். 448 பேர் மட்டுமே சிறார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 124 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 968 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுவர் மனநல ஆலோசகர் ரமா சீனிவாசன், ’’இதுபோன்ற வழக்குகளில் கைதாகி வரும் குழந்தைகளை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்கிறது. இதற்கு காரணம் பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமை, நினைத்ததை சாதிக்கமுடியாத ஏக்கத்தினால் உருவாகும் கோபம் போன்றவை தவறான நபர்களின் சேர்க்கைக்கு வழிவகுக்கிறது. இவர்கள்தான் பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்’’ என கூறுகிறார்.