சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தன் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி, முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்புடைய செய்தி: சிறுமிக்கு பாலியல் தொல்லை : முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது
நாகர்கோயிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "2017-ஆம் ஆண்டு நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அந்த வருடத்திலேயே இவ்வழக்கு பதியப்படவில்லை. அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படாத நிலையில், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு என்மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தற்போது நாகர்கோயில் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக இவ்வழக்கு பதியப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்." எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன் வழக்கு குறித்து நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.