நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் தெரு பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகம் உள்ளது. இங்கு கௌரி காஞ்சனா என்ற பெண்மணியும், மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையல்காரர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் கௌரி காஞ்சனா என்ற சமையலருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவரின் கணவர் குடி போதைக்கு அடிமையானவர் என்பதால், தனது குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.
இதனால் அவரின் கடன் சுமை சுமார் 10 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இவர் ஒருவரது வருமானத்தில் தனது குழந்தைகளை பார்த்துக் கொண்டு, கடனையும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடன்காரர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் தன்னுடன் பணிபுரிந்து வந்த மற்றொரு சமையலாளர் மாதேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து கடனை கட்டிவிடலாம் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து சமையல் கூடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரியை கீழே தள்ளி கழுத்தை நெரித்துக் கொலை செய்தள்ளார்.
இதையடுத்து மாதேஸ்வரியின் சடலத்தை ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற தனது தாயை காணவில்லை என மாதேஸ்வரியின் மகள் கவிதா, குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காணாமல் போன மாதேஸ்வரியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே கௌரி காஞ்சனா, மாதேஸ்வரியின் நகையை, குமாரபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை செய்து, அந்த பணத்தை பெற்று தான் கடன் பெற்ற சிலருக்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தனது குழந்தைகளுடன் தலைமறைவானார்.
இந்நிலையில் தனது மகளை காணவில்லை என கௌரி காஞ்சனாவின் தந்தை முருகன் குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். ஒரே இடத்தில் பணிபுரிந்த இருவரும் தொடர்ந்து காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த போலீசார், நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் விசாரணையில், மாதேஸ்வரி உயிரிழந்துவிட்டார் என்ற சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில், தங்கள் விசாரணையை தீவிர படுத்தினர். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்து கொண்ட கௌரி காஞ்சனா உடனடியாக குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் தஞ்சமடைந்து, மாதேஸ்வரியை கொலை செய்து, தான் கால்வாயில் வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சரணடைந்தார்.
இதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் முருகன் அவரை குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் தொடர்ந்து கௌரி காஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் மாதேஸ்வரியை கொலை செய்தது உண்மை என்றும், மாதேஸ்வரியின் சடலத்தை காலிங்கராயன் கால்வாயில் வீசியதையும் கூறினார். இதனையடுத்து மாதேஸ்வரியின் உடலை தேடுவதற்காக கௌரி காஞ்சனாவுடன் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொலை செய்து 40 தினங்கள் கடந்த நிலையில் சடலம் ஏதும் அந்த பகுதியில் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு பதிவு செய்து கௌரி காஞ்சனாவை குமாரபாளையம் போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மாதேஸ்வரியை கௌரி காஞ்சனா மட்டும் தனி நபராக கொலை செய்தாரா? அல்லது அவருக்கு உறுதுணையாக யாராவது இருக்கின்றனரா? என்பதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், காலிங்கராயன் கால்வாய் பகுதியில் மாதேஸ்வரியின் சடலத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குமாரபாளையம் பகுதியில் தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை, கந்துவட்டி மற்றும் கடன் தொல்லையை தீர்த்துக்கொள்ள மற்றொரு பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதேஸ்வரி உடலை எப்படி ஒரு பெண்ணால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதை அடுத்து மாதேஸ்வரியை கொலை செய்ய மேலும் சிலர் உதவியாக இருந்திருப்பதாகவும் மேலும் ஒரு பெண் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கௌரிகாஞ்சனாவுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த கந்துவட்டிக் காரர்கள் யார்? கௌரி காஞ்சனா கொலை செய்து கடனை கட்டும் அளவிற்கு நெருக்கடி கொடுத்த நபர்கள் யார்? என்று பல கோணங்களில் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.