செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அடுத்த கோக்கலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு பயிர் கடன், நகை கடன், மத்திய கால கடன், மாற்றுத்திறனாளி கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியில் தாங்கள் வாங்கிய கடனுக்கு தவணை காலத்தில் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வங்கியில் இருந்து கடன் வாங்கிய பலருக்கு தாங்கள் வாங்கிய கடனை செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, உத்தரவின் பேரில் திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கிருஷ்ணன் தலைமையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வங்கியில் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்த அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகிய இருவரும் சேர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பணத்தை போலியாக பில் தயாரித்து ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 ரூபாயை முறைகேடாக கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து துணைப் பதிவாளர் கிருஷ்ணன், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கூட்டுறவு சங்க செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.