வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதுபோல் நூதனக்கொள்ளை முயற்சி - நாமக்கல் போலீசார் வலைவீச்சு

வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதுபோல் நூதனக்கொள்ளை முயற்சி - நாமக்கல் போலீசார் வலைவீச்சு
வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதுபோல் நூதனக்கொள்ளை முயற்சி - நாமக்கல் போலீசார் வலைவீச்சு
Published on
நாமக்கல்லில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை மாற்றுவதுபோல் நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயலும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு  நாமக்கல் போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வாசுகி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் செல்போன் உதிரி பாகங்கள் மொத்த விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று இரவு டிப் டாப் உடை அணிந்து வெளிநாட்டுக்காரர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் செல்போன் உதிரி பாகங்கள் வாங்குவது போல் நிற்க, மற்றொருவர் தன்னிடம் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளதாகவும், அதனை வைத்துக்கொண்டு இந்திய ரூபாய் வேண்டும் எனவும் கடையில் உள்ள காசாளரிடம் கேட்கிறார். அதற்கு அவர் இங்கு வெளிநாட்டு கரன்சிகளை வாங்குவதில்லை என கூறுகிறார்.
ஆனால் அந்த நபர் இந்திய நூறு ரூபாய் நோட்டுகளை காட்டுங்கள் அது எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என கேட்க, கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த நபர் முதலில் 500 ரூபாய் தாளை எடுத்து காண்பிக்கிறார்.
அதை வாங்கிப் பார்த்தவர் திரும்ப கொடுத்தவுடன், 2000 ரூபாய் நோட்டுகளை பார்க்க தருமாறு கேட்க அப்போது கல்லாவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுடன் இருந்த ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துள்ளார் கடைக்காரர். கட்டோடு கொடுங்கள் பார்க்க வேண்டும் என கூறிய அந்த நபர் வேகமாக தனது பர்சை டேபிள் மேல் வைத்துவிட்டு 500 ரூபாய் கட்டை பிரித்து வேகமாக எண்ணுவது போல் எண்ணி அதில் 10-க்கும் மேற்பட்ட நோட்டுகளை மறைத்து வைத்து உடனடியாக பணத்தை முழுவதும் திருப்பி கொடுப்பது போல் கொடுத்து விட்டு திருடிய பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயல்கிறார்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கடையிலிருந்து மற்றொரு ஊழியர் அவர்களை தடுத்தவுடன் பணத்தை கொடுத்துவிட்டு, கடையை விட்டு உடனடியாக  வெளியே செல்கின்றனர் அந்த நபர்கள். மேலும் செல்லும்போது திருடியதை திரும்ப கேட்ட நபரை மிரட்டி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி செல்கின்றனர். இதேபோல் நாமக்கல் கடைவீதி அருகே உள்ள ஒரு பழமுதிர் நிலையத்திற்கும் சென்ற இந்த கும்பல் அங்கேயும் இதேபோல் கரன்சி நோட்டுகளை மாற்ற கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் இந்த கும்பல் அங்கிருந்து வெளியே சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் அந்த கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளன. நாமக்கல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நூதன முறையில் கொள்ளையடிக்க முற்பட்ட கும்பலை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com