செய்தியாளர்: துரைசாமி
நாமக்கல் அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் எட்டிக்கண் (72). இவர், கடந்த 1983–ஆம் ஆண்டு காதப்பள்ளி கிராமத்தில் 5.82 ஏக்கர் நிலத்தை பழனியாண்டி என்பவரிடமிருந்து கிரையம் செய்துள்ளார். அதன்பிறகு, 2023–இல் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி சாந்தி பெயருக்கு, எட்டிக்கண், அவரது மனைவி எட்டம்மாள், மகன் வேலுசாமி ஆகியோர் நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பவர் ஆப் அட்டர்னி செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 5.82 ஏக்கரில் 8,400 சதுர அடி நிலத்தை சாந்தி, திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமிக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில், சில மாதங்களில் சாந்தி இறந்து விடவே, அவர் பெயரில் எட்டிக்கண் பதிவு செய்த பவர் ஆப் அட்டர்னி ரத்தாகி விட்டது. இதன்மூலம் மீண்டும் எட்டிக்கண் பெயருக்கு 5.82 ஏக்கர் நிலமும் வந்துவிடும். இந்நிலையில் எட்டிக்கண், எட்டம்மாள், வேலுச்சாமி பெயரில் உள்ள அந்த நிலத்தை, பொன்னுசாமி, உண்மையான நில உரிமையாளர்களின் புகைப்படத்தை மாற்றி ஆள்மாறாட்டம் மூலம் புதியதாக பவர் ஆப் அட்டர்னி செய்து நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
ரூ.50 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்திலும் பதிவு செய்து டிடிசிபி உரிமம் பெற்றுள்ளார். இதையடுத்து. தன்னிடம் கார் ஓட்டுநராக உள்ள சந்திரசேகருக்கு 7,200 சதுரடி நிலத்தை பொன்னுசாமி கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து தங்களது கைரேகை இல்லாமல், பெயரை மட்டும் பயன்படுத்தி மோசடியாக 50–க்கும் மேற்பட்ட ஆவணங்களை தயாரித்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் எட்டிக்கண், வேலுசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பொன்னுசாமி, ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட மருத்துவர் அனுராதா, சந்திரசேகரன், நந்தகுமார், பழனிசாமி, ஆவண எழுத்தர் ரவிக்குமார், முருகேசன், ரவிச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் முதல் நபரான பொன்னுசாமியை இன்று அதிகாலை திருப்பூரில் கைது செய்த போலீசார், நாமக்கல் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.