நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி. இவர்களுக்கு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கடந்த 7-ம் தேதி மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இந்தநிலையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் அனுராதா என்பவர் குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அந்த தம்பதிக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதும், அவர்கள் வறுமையில் இருப்பது குறித்துத் தெரிந்து கொண்டுள்ளார் அரசு மருத்துவர் அனுராதா.
இதனையடுத்து கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவருக்கு அந்த தம்பதி குறித்து தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடைய செல்போன் நம்பர் மற்றும் முகவரியும் கொடுத்து அவர்களிடம் குழந்தையை 2 லட்சத்திற்குப் பேரம் பேசச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்ட லோகாம்பாள், தான் சூரியம்பாளையம் மருத்துவமனை செவிலியர் போலத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தையைப் பற்றி நலம் விசாரித்துள்ளார். மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது கருத்தடை செய்யவில்லையா? என்பது போல அக்கறையுடன் பேசி வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தம்பதி அருகில் இருக்கும் செவிலியரிடம் விசாரித்த போது மருத்துவமனை செவிலியர்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மாட்டார்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதில் உஷாரான தம்பதியினர் லோகாம்பாலை வீட்டுக்கு அழைப்பதற்குப் பதிலாக ஒரு பேக்கரியில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய லோகாம்பாள் தான் மருத்துவமனை செவிலியர் இல்லை என்றும் தத்து எடுக்கும் மையம் வைத்து நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். மூன்றாவதாக உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தைக்கு 3 லட்சம் தருகிறோம் குழந்தையைத் தத்து கொடுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு உடன்படாமல் அவர்களை அங்கிருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார் லோகாம்பாளை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
பின்னர் லோகாம்பாள் கொடுத்த தகவலின் பேரில் திருச்செங்கோடு அரசு மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், வறுமையில் உள்ள நபர்களிடம் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு நல்ல தொகை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மருத்துவர் அனுராதா ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் கருக்கலைப்புக்காகத் தனியார் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டாம் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் விற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3 இலட்சம் முன்பணம் பெற்றுள்ளார். திருச்செங்கோடு பகுதியில் கடந்த சில மாதங்களாக 7 குழந்தைகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வந்த மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் மருத்துவர் அனுராதா பணி இடை நீக்கத்திற்கான உத்தரவினை வழங்கி விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடைத்தரகர்களை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.