செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் ஆர்ட் (கலை) ஆசிரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமையாசிரியர் நடத்திய விசாரணையில், ஆசிரியர் ராமச்சந்திர சோனி, பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியரை கைது செய்து, அவர் மீது போக்சோ உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.