சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த மோசடி புகாரின்பேரில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போன், மடிக்கணினியை ஆய்வு செய்தபோது பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ, புகைப்படங்களும் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காசியின் வீடு பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சாலை பகுதியில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக வந்த புகாரை அடுத்து காசியின் தந்தை தங்கபாண்டியன் பெயரில் இருக்கும் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்தனர். அப்போது பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டு இருப்பதும், வீடு கட்டும்போது பெற்ற அனுமதிக்கு மாறாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், வீட்டை ஜப்தி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே ஏற்கெனவே சிறையில் இருக்கும் காசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.