இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நாகை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத் துறையினர், நாகை அருகே செருதூர் வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது படகில் இருந்து தப்பியோட முயன்றவர்களை தடுத்து அதிரடியாக பிடித்தனர். இதையடுத்து நடைபெற்ற சோதனையில், சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் மதிப்புடைய 220 கிலோ கஞ்சா 9 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள் அழகன், காஞ்சிநாதன், நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் உட்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நாகையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர், இதைத் தொடர்ந்து சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் பிரேம்பாபு, நமச்சிவாயம், உமர் முகமது, சுனில் உள்ளிட்டோர் குற்றவாளிகளிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, இலங்கைக்கு யாரிடம் விற்பனைக்காக கொண்டு செல்கிறீர்கள், படகின் உரிமையாளர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.