தனது நண்பருடன் மான் வேட்டைக்கு சென்ற நபர் மர்மான முறையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் முஸ்லீம் கொட்டாய் ,ரெட்டி வலசை பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து மான் வேட்டையாட இளவம்பாடி வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிலமணி நேரங்களில் கமலக்கண்ணன் தன் மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னை சுட்டுட்டாங்க என மனைவியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர். அங்கு கமலக்கண்ணன் வயிற்றுப்பகுதியில் 3 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் உள்ளிட்ட போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கமலக்கண்ணனுடன் சென்ற சிவா தலைமறைவாகியிருந்த நிலையில், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.