உத்தரபிரதேசத்தில் சிறுவனைக் கடத்தி கொலை செய்ததை மறைத்த குற்றவாளியை ஸ்பெல்லிங் மிஸ்டேக் வைத்து போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் பிரதாப் சிங்(22 வயது). இவர் அக்டோபர் 26-ஆம் தேதி, தனது தூரத்து உறவினரின் 8 வயது மகனை அவரது பாட்டி வீட்டிலிருக்கும்போது கடத்திச் சென்றுள்ளார். மேலும் அன்று இரவே தன்னிடம் இருந்த திருட்டு மொபைலிலிருந்து சிறுவனின் தந்தையை மிரட்டி, ரூ.2 லட்சம் கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘’சீதாப்பூருக்கு 2 லட்சம் பணத்துடன் வரவும். போலீஸிடம் புகார் கொடுத்தால், உங்கள் மகன் கொலை செய்யப்படுவான்’’ என்று இந்தியில் எழுதியுள்ளார்.
பெற்றோருக்கு பணம் கிடைக்காததால், நவம்பர் 4ஆம் தேதி, பெனிகன்ஜ் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். அதிலிருந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலில் சிறுவனின் மகனுக்கு செய்திவந்த நம்பருக்கு கால் செய்துள்ளனர். ஆனால் அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. சைபர் கண்காணிப்பு துறையின் உதவியுடன் விசாரணையைத் தொடர்ந்திருக்கின்றனர். குற்றவாளி அனுப்பிய செய்தியில், police என்பதை ‘pulish’ என்றும், Sitapur என்பதை ‘Seeta-pur’ என்றும் ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதியிருந்ததை வைத்து அவருக்கு படிப்பறிவு இல்லை என்பது தெரியவந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில் போலீஸ் சூப்பிரண்டண்ட் அனுராக் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சிறுவன் கடத்தப்பட்ட பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்ததிலிருந்து ராம் சிங் உட்பட 10 பேரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்தவர்களை, ‘’எனக்கு போலீஸ் வேலை வேண்டும். ஹர்தோயிலிருந்து சீதாப்பூர் வரை என்னால் ஓடமுடியும்(I want a police job. I can run from Hardoi to Sitapur)’’ என ஆங்கிலத்தில் எழுதச் சொல்லியுள்ளனர்.
சிங், முதலில் செய்த அதே எழுத்துப்பிழையை மீண்டும் செய்ததால் சந்தேகத்திற்கிடமின்றி போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் சிங், சிறுவனை கடத்தி கொலைசெய்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.