முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம்;காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைதுசெய்க: கே.பாலகிருஷ்ணன்

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம்;காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைதுசெய்க: கே.பாலகிருஷ்ணன்
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம்;காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைதுசெய்க: கே.பாலகிருஷ்ணன்
Published on

பொது இடத்திலும், காவல் நிலையத்திலும் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலால்தான் முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தலை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணித்திருக்க வாய்ப்புகள் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தில் வசித்த மணிகண்டன் மற்றும் அவரது இரு நண்பர்களை கடந்த 4.12.2021 அன்று மாலை கீழத்தூவல் காவல்துறையினர் மறித்துள்ளனர். மற்ற இருவரும் பயந்து தப்பியோட மணிகண்டனை பிடித்த காவல்துறை அங்கேயே கடுமையாகத் தாக்கியதோடு, மேல் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கடுமையாக தாக்கியுள்ளதோடு, அவர்கள் கஞ்சா வைத்திருந்தார்கள் எனும் போலியான ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கிறது.

அன்று இரவு 7.30 மணியளவில் காவல்நிலையத்திலிருந்து மணிகண்டனை அவரது அம்மாவும், உறவினரும் அழைத்து வந்துள்ள நிலையில், 5.12.2021 அன்று அதிகாலை 3.30 மணியளவில் மணிகண்டன் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். முதல் நாள் காவல்துறையினர் அழைத்துச் செல்கிற போது ஆரோக்கியமான உடல்நிலையுடன் சென்ற மணிகண்டன் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து மணிகண்டனின் பெற்றோர் கேட்டபோது, அவருக்கு முறையான விளக்கத்தை அளிக்காமல் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மணிகண்டனின் இறப்பு தற்கொலையாகவோ, பாம்பு கடித்ததாலோ தான் சம்பவித்திருக்க முடியும் என கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் எந்த அத்துமீறல்களும் நடக்கவில்லை என காவல்துறை ஊடகங்களில் தன்னிச்சையாக செய்திகளும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

பொது இடத்திலும், காவல் நிலையத்திலும் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலால்தான் மணிகண்டன் மரணித்திருக்க வாய்ப்புகள் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும், உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். மேலும், தமிழகத்தில் இத்தகைய தன்மையில் தொடரும் மோசமான காவல் நிலைய குற்றங்களையும், அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்திட உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com