பெற்ற மகனை தாயே கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம், காதலன் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தால் வெளியே வந்தது.
கடந்த 27-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள முட்புதரில் சிறுவன் ஒருவர் கண்டெடுக்கப்பட்டான். ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், தனது தாயின் பெயர் சித்ரா என்றும், தான் அவருடன் செல்லப்போவதில்லை என்றும் கூறி அதிகாரிகளை குழப்பினார் அச்சிறுவன். மகன் ஏன் தாயுடன் செல்ல மறுக்கிறான் என்ற காரணத்தை அறிய அவனிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், சிறுவனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.
விவகாரத்தின் விபரீதத்தை அறிந்த காவல்துறையினர், சிறுவனின் தாய் சித்ரா, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காமராஜர் நகரில் வசித்து வருவதைக் கண்டுபிடித்தனர். சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. 2 மகன்களுக்குத் தாயான சித்ரா, கணவர் ஆனந்தனைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அப்போதுதான் காமராஜர் நகரைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகேஷை வற்புறுத்தி வந்திருக்கிறார் சித்ரா. ஆனால், ஆனந்தனுக்கு பிறந்த மகன்கள் இருவரையும் விட்டுவிட்டு வந்தால் மட்டுமே, சித்ராவைத் திருமணம் செய்துகொள்வதாக கூறியிருக்கிறார் மகேஷ். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சித்ராவின் இரண்டரை வயது இளைய மகன் உயிரிழந்தான். இது விபத்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், கொலை என்றே சந்தேகப்பட்டனர் கிராம மக்கள். அதில் மகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் பேச்சு அடிபட்டிருக்கிறது. சிறுவனின் மரணம் தன்மீது கொலைப்பழியாக விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த மகேஷ், சித்ராவுக்கே தெரியாமல் ஒரு ரகசிய வேலையைச் செய்திருக்கிறார். கடந்த 4 தினங்களுக்கு முன் மூத்த மகனை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயற்சித்தபோது, அதனை யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் மகேஷ்.
மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக நினைத்த இருவரும், அவனை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முட்புதருக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனிடையே, அந்த கொலைமுயற்சி வீடியோவை நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய மகேஷ், சித்ராதான் குழந்தையைக் கொன்றதாகவும், தனக்கும் இச்சம்பவத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறியிருக்கிறார். அந்த வீடியோ மற்ற வாட்ஸ்அப் குழுக்களுக்கு பரவியதும், உயிரிழந்துவிட்டதாக நினைத்த சிறுவன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுமே சித்ரா சிக்கிக்கொள்ள காரணமாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்த புகாரில் சித்ராவை கைதுசெய்த காவல்துறையினர், 2 மாதங்களுக்கு முன் உயிரிழந்த இளைய மகனையும் அவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தலைமறைவான சித்ராவின் காதலன் மகேஷ் தற்போது தேடப்பட்டு வருகிறார்.