உ.பி: பெட்டி பெட்டியாக பணம்...தொழிலதிபர் வீட்டில் இதுவரை ரூ.150 கோடி பறிமுதல்

உ.பி: பெட்டி பெட்டியாக பணம்...தொழிலதிபர் வீட்டில் இதுவரை ரூ.150 கோடி பறிமுதல்
உ.பி: பெட்டி பெட்டியாக பணம்...தொழிலதிபர் வீட்டில் இதுவரை ரூ.150 கோடி பறிமுதல்
Published on

’’150 கோடி ரூபாய் வரை இதுவரை பறிமுதல் செய்திருக்கிறோம், இன்னும் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்’’ என அதிகாரிகளே மலைத்துப்போகும் அளவுக்கு கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார் ஒரு தொழிலதிபர். 

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பியூஸ் ஜெயின் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில்தான் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பியூஸ் ஜெயின், வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பான் மசாலா, குட்கா தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்திவருகிறார். தவிர, பெட்ரோல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் என பல தொழில்களையும் செய்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு நிறுவனங்கள் உட்பட 40 நிதி நிறுவனங்களையும் இவர் நடத்திவருகிறார். இத்தனை தொழில்கள் மூலம் சம்பாதித்த வருவாய்க்கு இவர் கணக்கு காட்டாமல், கோடி கோடியாக வரி ஏய்ப்பு செய்துவருகிறார் என மத்திய மறைமுக வரி ஏய்ப்பு தடுப்பு மற்றும் சுங்க வாரியத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பியூஸ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அள்ள அள்ளச் சுரங்கம் போல பணக்கட்டுகள் வந்து விழ, முதலில் ஒரு பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதுவும் போதாததால், மேலும் 3 எந்திரங்களை கொண்டு பணம் எண்ணப்பட்டது. 150 கோடி எண்ணி முடித்தபிறகும் பணமூட்டைகள் மலைபோல குவிந்ததால் அதிகாரிகள் திணறிப்போனார்கள். தவிர ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான போலியான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், விலை உயர்ந்த கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய பறிமுதல் இதுதான் என்கிறார் மத்திய மறைமுக வரி வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com