அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் ரூ.1 கோடிக்கு பட்டுப்படவை வாங்கிச் சென்றுவிட்டு, பணம் தராமல் ஏமாற்றியதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவிட்டுப்பாளையம், பகவதி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் லட்சுமணன் (45). இவர், கடந்த 25 ஆண்டுகளாக கைத்தறி பட்டுப்புடவை நெசவு செய்து ஜவுளிக் கடைகளுக்கு மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை சுங்கம் சின்னையா பிள்ளை வீதியில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவரின் மனைவி சுஜாதா (42) மற்றும் சேலத்தைச் சேர்ந்த ரவி ஆகியோர் அந்தியூருக்கு வந்து லட்சுமணனிடம் அறிமுகமாகியுள்ளனர்.
இதையடுத்து தங்களுக்குச் சொந்தமான ஜவுளிக்கடையில் விற்பனை செய்ய மொத்தமாக பட்டு சேலைகளை வாங்குவதாக லட்சுமணனிடம் சுஜாதா கூறியுள்ளார். முதலில் பணம் கொடுத்து லட்சுமணனிடம் கொள்முதல் செய்த சுஜாதா, அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்தியூரில் நெசவுத்தொழில் செய்யும் பலரும் சுஜாதாவுக்கு பட்டுச்சேலை வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் துணிக்கடை நடத்தும் குமார் மற்றும் கோவையில் துணிக்கடை நடத்தும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நெசவாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் சுஜாதா. அவர்களுக்கும் பட்டுசேலைகள் கொடுக்கும்படி அங்கிருந்தோருக்கு பரிந்துரை கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருவரும் வியாபாரத்துக்கு பட்டுசேலை வாங்கிச் சென்ற பின்னர், நெசவாளர்களுக்கு முறையாக பணம் தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து, பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் பணம் தரவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுஜாதா அந்தியூரில் பாண்டியம்மாள் என்பவரிடம் மீண்டும் பட்டுபுடவை வாங்கி, ஏமாற்ற முயன்றபோது பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்தியூரில் பட்டுச்சேலை விற்பனை செய்யும் பாண்டியம்மாள், முனுசாமி, சம்பத், சகுந்தலா, அன்பழகன், ராஜேந்திரன், எல்லப்பாளையம் சம்பத் ஆகியோரிடமும் இவர்கள் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பட்டு சேலை வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மோசடி வழக்கில் சுஜாதாவை கைது செய்த அந்தியூர் போலீசார், மோசடியில் தொடர்புடைய சேலம் ரவி, கோவை கிருஷ்ணமூர்த்தி, சென்னை குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.