மணப்பாறை அடுத்த வளநாடு முகமதியாபுரத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியின் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.2 லட்சம், 24 பட்டுப்புடவைகள், 10 துப்பாக்கி தோட்டாக்கள் கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு முகமதியாபுரத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவர் தனது விளைநிலங்கள் உள்ள பகுதியில் வீடு கட்டி வசித்துவருகிறார். அருகிலேயே ராணுவ அதிகாரியான அவரது சகோதரர் ஜெயதனராஜ் வீடும் உள்ளது. துக்க நிகழ்ச்சிக்காக சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதிக்கு சென்றுள்ளார். இரவு அங்கேயே தங்கியும் உள்ளார். இந்நிலையில், விடியற்காலை அவரது சகோதரர் ஜெயதனராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு சுப்பிரமணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகவும் திருட்டு நடந்திருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய சுப்பிரமணி குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 25 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், 24 பட்டுப்புடவைகள், 4 மணி பர்ஸ்கள், 4 உண்டியல்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இரட்டை குழல் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள சுப்பிரமணி, தேர்தல் நன்னடத்தை விதிக்காக காவல்நிலையத்தில் தனது துப்பாக்கியை ஒப்படைத்திருந்த நிலையில், வீட்டில் இருந்த 10 துப்பாக்கி தோட்டாக்களையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றதும் தெரியவந்தது.
பின் தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் மனோகர் தலைமையிலான போலீஸார், மோப்ப நாய் லில்லி-யை வரவழைத்தனர். வீட்டினைச் சுற்றி சுற்றி வந்த லில்லி, வளநாடு சாலையில் சிறுது தூரம் ஓடி நின்றுவிட்டது. நிகழ்விடத்தில் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ள வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.