திருவள்ளூரில் காணாமல் போன பெண் ஒருவர் ஒரு வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் கணவர், தன் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது திருவள்ளூர் காவல் துறை.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியையடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாபு (36) என்பவர், பள்ளி பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அமுதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இருவரும், ஏற்கெனவே இருமுறை வீட்டை விட்டு வெளியேறி இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை இரு முறை அழைத்து வந்துள்ளனர் குடும்பத்தினர். அமுதாவை, அவர் கணவர் பாபுவுடன் மீண்டும் மீண்டும் சேர்த்து வைத்து கட்டாயப்படுத்தியுள்ளனர் குடும்பத்தினர். இதனால் மனமுடைந்த அமுதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறுதியாக மீண்டுமொருமுறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அமுதா. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை என்ற துக்கத்தில் பாபு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாபுவின் நண்பரான சிவப்பிரகாசம் என்பவர் மனைவி அமுதா இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் சொன்ன இடமான புழல் அருகே பாபு சென்று பார்த்துள்ளார். அங்கு பாபு விசாரித்த போது, ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தம்மை செத்துப் போ என்று சொல்லியதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் கணவன் பாபுவிடம் தெரிவித்து விட்டு அமுதா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்துள்ள பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் அமுதா இறந்து கிடப்பதாக பாபுவின் நண்பர் சிவபிரகாசம், பாபுவுக்கு தொலைபேசியில் கொடுத்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்லனர். இதனால் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் தமது மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கணவர் பாபு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர காவல் துறையினர், அமுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.