செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதிராமன். இவர் கடைவீதி பகுதியில் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கிஷோர், போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்திற்கு வழிவிடாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கிஷோரை கண்டித்துள்ளார்.
அப்போது கிஷோர் திமிராக பேசியதால் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் கிஷோரின் செல்போனை வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து குத்தாலம் காவல் நிலையத்திற்கு கிஷோருடன் வந்த அவரது தந்தை மகேஸ்வரன், கடைவீதியில் தன் மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள் என்று கூறி குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், மகேஸ்வரன், காவல் ஆய்வாளர் ஜோதிராமனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி மிரட்டியதாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.