காய்கறி மூட்டைக்குள் கஞ்சா கடத்தல் : சென்னையில் சிக்கிய கும்பல்..!

காய்கறி மூட்டைக்குள் கஞ்சா கடத்தல் : சென்னையில் சிக்கிய கும்பல்..!
காய்கறி மூட்டைக்குள் கஞ்சா கடத்தல் : சென்னையில் சிக்கிய கும்பல்..!
Published on

சென்னையில் பெரிய கூட்டத்துடன் கஞ்சா கடத்தல் செய்த கும்பலை காவல்துறையினர் திட்டமிட்டுப் பிடித்தனர்.

பொது முடக்கத்திற்குப் பின்னர் சென்னை மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், போதைக்காக இளைஞர்கள் கஞ்சாவைத்தேடிச் செல்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஆணையர் விஸ்வநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் சுதாகர் மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்துடன் மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை எஸ்ஐ தினேஷ் மற்றும் தலைமைக் காவலர்கள் லோகநாதன், ராமமூர்த்தி, ராம்குமார் தலைமையிலான தனிப்படையும் அமைக்கப்பட்டது. இவர்கள் சென்னை மாநகரில் கஞ்சா வழக்கில் சிக்கிய பழைய குற்றவாளிகளின் பட்டியலை ஆய்வு செய்தனர்.

அதன்படி, ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ரமேஷ் என்கிற கஞ்சா ரமேஷ் என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை கடந்த 2 மாதங்களாகப் பின்தொடர்ந்த காவல்துறையினர் திட்டமிட்டுப் பிடித்தனர். அவர் காய்கறி ஏற்றி வந்த மினி வேனை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் வைத்து மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். உள்ளே காய்கறி மூட்டைகளோடு கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 33.5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ரமேஷிடம் விசாரணை நடத்திய போது, அவர் சென்னையில் ஒரு பெரிய கூட்டத்துடன் இணைந்து கஞ்சா விற்றதாகத் தெரிவித்தார்.

ரமேஷ் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சென்னை ஐஸ் ஹவுஸ், பட்டினப்பாக்கம், அடையாறு, தரமணி போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மெயின் டீலர்கள் அங்கிருந்து கோயம்பேட்டுக்கு வரும் காய்கறி லாரிகளில் கஞ்சாவையும் மூட்டை கட்டி வெங்காயம் என்ற பெயரில் அனுப்பி விடுவதும், அதனை ரமேஷ் கோயம்பேட்டுக்குச் சென்று காய்கறி வேனில் ஏற்றிக் கொண்டு வருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. பொது முடக்கத்தால் தற்போது திருமழிசை பகுதிக்குக் காய்கறி சந்தை மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கும் தனது கஞ்சா இறக்குமதியைத் தொடர்ந்துள்ளார்.

விசாரணையின் அடிப்படையில் ரமேஷுக்கு வலது கரங்களாகச் செயல்பட்டு வந்த நிஷா, பிரகாஷ், ஏழுமலை, அருண், ராஜேஸ்வரி,சுப்புலட்சுமி, சித்திக், ஜெயராமன் ஆகிய 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள், மினி வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 8 பேரும் தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆந்திராவிலிருந்து ரமேஷுக்கு கஞ்சா சப்ளை செய்த மெயின் டீலர் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com