திருமணமான ஒரு மாதத்திலேயே வேறொறு திருமணம் செய்ய முயற்சித்த மனைவி, வாட்ஸ்ஆப் மெசேஜை கண்டு அதிர்ந்து போன கணவர், நண்பர்களுடன் திட்டமிட்டு திருமண மோசடி கும்பலை வீட்டிற்க்கு வரவழைத்து கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ் - கண்ணம்மாள். இந்த தம்பதியருக்கு சரவணன் என்ற மகனும், சாரதா என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் கைத்தறி நெசவு செய்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் நெசவுத்தொழில் செய்ய முடியாத நிலை இருந்துள்ளது.
மகளுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் சரவணனுக்கும் 35 வயதாகியிருக்கிறது. திருமணம் செய்ய பெண் பார்க்க நண்பர்களிடம், உறவினர்களிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் புளியம்பட்டி அருகே உள்ள பரிசபாளையத்தை சேர்ந்த மலர் என்ற பெண் புரோக்கரிடம், திருமணத்திற்கு பெண் பார்க்க கூறியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு புரோக்கர் மூலமாக, விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா என்ற ஏழை பெண் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து சரவணனும், சரிதாவை பார்த்து உள்ளார். அப்போது சரிதா குறித்து விசாரித்தபோது, தாய் தந்தை விபத்தில் இறந்துவிட்டதாகவும், ஒரு அண்ணன் உள்ளதாகவும், அவரும் திருமணம் செய்துகொண்டு கேரளாவில் வசிப்பதாகவும், தற்போது ஆதரவு இல்லாமல் ஈரோட்டில் விடுதியில் தங்கி தனியார் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் சரிதா கூறியுள்ளார்.
அப்போது சரிதாவின் பெரியம்மா என அறிமுகப்படுத்திக்கொண்ட விஜயலட்சுமி, பெற்றோர் இல்லாத பெண் என்பதால் குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வார் எனக் கூறியதோடு, திருமண வேலைகளை சொந்த மகளுக்கு செய்வது போன்று முன்னின்று செய்துள்ளார். அதை நம்பிய சரவணன், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்கிடையே திருமணம் உறுதியானதும், இதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கமிஷனாக புரோக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து சரவணனும் நண்பர்கள், உறவினர்களிடம் 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, மீதியை திருமணத்திற்கு செலவு செய்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து கடந்த 20.8.2022 தாசப்பகவுண்டன் புதூர் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சரிதாவை சரவணன் அவர்கள் குல வழக்கப்படி திருமணம் செய்து உள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் சரிதாவின் அன்பில் திளைத்து போன சரவணன், மனைவி சரிதா மீது உயிரையே வைக்கும் அளவிற்கு பாசத்தை காட்டியுள்ளார்.
இந்நிலையில் மனைவி வெளியே சென்றிருந்த போது மனைவியின் செல்போனில் வாட்ஸ் அப் மெசேஜ் வரவே, ஏதர்ச்சையாக வாட்ஸ் அப்பை பார்த்தபோது, சரிதாவின் பெரியம்மா என்று கூறப்பட்ட விஜயலட்சுமிக்கு இரண்டு வாய்ஸ் மெசேஜ்களை சரிதா அனுப்பி இருப்பது தெரியவந்தது. நேரடியாக பேசாமால் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்று நினைத்த சரவணன், அந்த வாய்ஸ் மெசேஜை கேட்க ஆரம்பித்த போது அதிர்ந்து போயுள்ளார்.
வாட்ஸ்அப்பில் சரிதா பேசியது, ’’இங்கு எல்லோரும் இருப்பதால் ஃப்ரீயாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகணும், பார்க்க ஆள் இல்லை. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. பெரியப்பா பாப்பாவை காலேஜில் சேர்க்க போயிட்டார். நான் தனியாக இருக்கேன். இந்த வாரம் பெட்ல சேர சொல்லி இருக்காங்கனு சொல்லு. இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது. இங்கே ஒரு குறையும் இல்லை'' என்று பேசி உள்ளார்.
அடுத்த ஆடியோவில், ''இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா, ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்தற்றேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம். வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு் நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்யவேண்டிய நிலை இருக்கு.
ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பபதால் ஃப்ரீயா பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போகனும்ன்னு சொல்லி இருக்கேன். நீ அழைச்சுட்டு போக வந்தா விட்டுடுவாங்க. வந்து அழைச்சுட்டு போ, நான் ஓடிப்போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும்.
அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு’’ என்று பேசி உள்ளார்.
மனைவி என நினைத்து பாசத்தை காட்டிய பெண், மோசடி கும்பலைs சேர்ந்தவர் என்பதை அறிந்த சரவணன் அதிர்ந்து போயுள்ளார். ஒரு வார காலமாக மனமுடைந்த நிலையில் இருந்த சரவணனை கண்டு அவரது நண்பர்கள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்து உள்ளனர். நண்பர்கள் தொடர்ந்து கட்டாயப்படுத்தவே, மனைவி சரிதாவின் சுயரூபத்தை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார், சரவணின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், மோசடி கும்பலை கையும் களவுமாக கூண்டோடு பிடிக்க முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து சரிதா பேசிய வாய்ஸ் மெசேஜ் குறித்து, எதையும் சரிதாவிடம் காட்டிக்கொள்ளாத சரவணன், தனது நண்பருக்கு பெண் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், உங்கள் பெரியம்மாவிடம் கூறி ஏதாவது பெண் இருந்தால் பார்க்க சொல்லு எனவும் கூறி உள்ளார். அதை நம்பிய சரிதாவும், விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு தனது கணவரின் நண்பருக்கு பெண் தேவை என கூறவே, விஜயலட்சுமியும், தனக்கு தெரிந்த பெண் இருப்பதாகவும், கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து பெண்ணின் புகைப்படத்தை அனுப்புமாறு சரவணன் கூறவே, விஜயலட்சுமியும், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். மாப்பிள்ளை புகைப்படத்தை விஜயலட்சுமி கேட்கவே, சரவணன், தனது நண்பரின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து திருமணத்திற்கு தனது நண்பர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், மணப்பெண்ணை அழைத்து வந்தால் தனக்கு நடந்தது போல் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார்.
அதற்கு விஜயலட்சுமி தனக்கு கமிஷன் எதுவும் வேண்டாம் என்றவர், மற்ற நான்கு புரோக்கர்களுக்கு மட்டும் கமிஷனாக 80 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே சரவணனும், பெண்ணை அழைத்துக்கொண்டு நேரில் வந்து விடுங்கள், திருமணத்திற்கு முன்பு கமிஷன் தொகை 80 ஆயிரம் ரூபாயை வாங்கி கொடுத்து விடுகிறேன் எனக் கூறி உள்ளார். அதை நம்பிய விஜயலட்சுமியும் விருதுநகரில் இருந்து நேற்று இரவு ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வாடகை காரில் தாசப்பகவுண்டன் புதூருக்கு வந்துள்ளார்.
விஜயலட்சுமி மற்றும் அவருடன் வந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்த சரவணன், நண்பர்கள் உதவியுடன், விஜயலட்சுமி, அவருடன் வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த விஜயா என்பவரையும், சரிதாவையும் பிடித்து வைத்து விசாரித்தபோது, திருமணமாகாத இளைஞர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறிவைத்து திருமணம் என்ற பெயரில் மோசடி செய்துவரும் கும்பல் எனபது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து மோசடி கும்பல் குறித்து சரவணன், பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீசார் சரவணனின் வீட்டிற்கு சென்று சரிதா, விஜயலட்சுமி, விஜயா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து பங்களாபுதூர் போலீசார் விஜயலட்சுமி, சரிதா, விஜயா ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.