நான் அவள் இல்லை ...திருமணம் செய்வதாக பல பேரை ஏமாற்றியதாக பெண் மீது புகார்

அரசியல்வாதிகள், தொழிலதிபர், காவல்துறை அதிகாரிகள் , சட்ட வல்லுநர்கர்கள் என 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியதாக பெண்மீது குவியும் புகார்கள்
சத்யா
சத்யாகோப்பு படம்
Published on

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் மகேஷ் அரவிந்த். இவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் பெண் கிடைக்காத காரணத்தால் இவரது உறவினர்கள் தீவிரமாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பே என்ற இணையதள செயலி மூலம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் தனக்கு வயது 30 என்றும் தமிழ்செல்வி என்ற தரகர் மூலம் வரன் தேடி வருவதாகவும் கூறி தமிழ்செல்வியையும் அரவிந்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் அரவிந்தோடு நெருங்கிப் பழகி வந்துள்ளார். திடீரென தனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்றும் இதனால் தனக்கு வெகு விரைவில் திருமணம் செய்து வைக்க தனது வீட்டார் ஏற்பாடு செய்து வருவதாகக் கூறியுள்ளார் சத்யா.

அதேநேரத்தில் சத்யா மீது காதல் கொண்ட அரவிந்த், தான் சத்யா வீட்டில் வந்து பேசி திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சத்யா வீட்டிற்கு தெரிந்தால் பிரச்னை ஆகும் எனக்கூறி, வீட்டைவிட்டு வந்து அரவிந்தைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார்.

இதனால் அரவிந்தும் சத்யாவும் பழனிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் ஆகாத நிலையில் இருந்த அரவிந்த் திடீரென திருமணம் செய்துகொண்டு வந்ததால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர் சத்யாவிற்குத் தேவையான நகை மற்றும் புடவைகளை வாங்கிக் கொடுத்து நன்றாக கவனித்து வந்துள்ளனர்.

திருமணமான இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் அரவிந்தின் பெற்றோர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் வசிக்கும் சத்யாவின் பெற்றோரிடத்தில் பேசி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்து, கொடுமுடிக்குச் சென்று சத்யா பற்றி விசாரிக்கும்போது ஏற்கெனவே சத்யா பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நகைக் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சத்யாவை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் அரவிந்த். ஆனால் வாசலிலேயே சுதாரித்துக்கொண்ட சத்யா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும், பின்னர் கரூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவரையும் காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியிருப்பதும் மற்றும் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் ஆகியோரை ஏமாற்றியதோடு 2012-ல் ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதும் அவருக்கும் சத்யாவிற்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்னும் விபரமும் தெரியவந்துள்ளது.

மேலும் சத்யாவின் திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வி மற்றும் சத்யா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சத்யா ஏராளமான திருமணங்கள் செய்து பல லட்ச ரூபாய் மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ளது.

நான் அவன் இல்லை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் 15க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com