பிரபல வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்று வரும் பிரபல நிறுவனமான பிரிமீயரின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அண்மைக் காலங்களில் அதிக அளவில் போலி பொருட்கள் பழுது நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டன. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அந்த நிறுவனம் புகார் அளித்தது. இந்தநிலையில் சென்னை மண்ணடி ராசப்ப செட்டி தெருவில் உள்ள தேஜி சிங் என்பவரின் கிடங்கில் இருந்து, பிரிமீயர் நிறுவனத்தின் பெயரில்
குக்கர், நான்ஸ்டிக் தவா, கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட 535 பொருட்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தேஜி சிங்கிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பிரிமியர் நிறுவனத்தின் பெயரில் போலிப்பொருட்களை தயாரித்து இவர் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தேஜி சிங் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.