மகாராஷ்டிராவில் மனநலம் பாதிக்கப்பட்டவரை விஷப்பாம்பை விட்டு கடிக்கச்செய்து இன்சூரன்ஸ் பணம் 5 மில்லியன் டாலர் பெறமுயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அக்மெத்நகர் மாவட்டம் அகோல் தாலுகாவிலுள்ள ராஜுர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்நத் அனாப்(50). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை வாஷிங்டனில் செஃப்பாக வேலைசெய்துவரும் 54 வயதான பிரபாகர் வாக்ச்சர் என்பவர், மேலும் 4 பேருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொலை செய்துள்ளார். நவ்நத்தை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று விஷப்பாம்பை ஏவிவிட்டு கொலை செய்திருக்கின்றனர். பின்பு அமெரிக்காவின் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இன்சூரன்ஸாகப் பெற முயன்றிருக்கிறார். ஆனால் அக்மெத்நகர் போலீசார் துணையுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் பிராபகர் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அக்மெத் நகர் போலீசார், 4 வருடங்களுக்கு முன்பே பிரபாகர் தனது மனைவி இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயார்செய்து மனைவி பெயரிலிருந்த இன்சூரன்ஸ் பணத்தை பெறமுயன்றதாகவும், ஆனால் நிறுவனம் போலி ஆவணங்களை கண்டறிந்து அவருக்கு பணம் தர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், பிரபாகர் வசதியான வாழ்க்கை வாழ்ந்துவந்தாலும் ஏன் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார் என்பது குறித்தும், இதுபோன்று வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பிரபாகர் உட்பட 5 பேரை கைதுசெய்து அவர்கள்மீது இந்திய சட்டப்பிரிவு 302, 201 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அக்டோபர் 29வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.