புதுச்சேரி சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவில் வசித்து வருபவர் தயாளன் (40). இவர் நைஜீரியா நாட்டில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் புதுச்சேரி காலாபட்டில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் விடுமுறைக்காகக் கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி வந்த தயாளன் நேற்று தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு விழுப்புரத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 40 ஆயிரம் பணம், ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை அடிக்கப்பட்ட நகை பையில் தயாளன் மனைவியின் செல்போஃன் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
நம்பர் 1 கீ.மி தூரம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சிக்னல் காட்டியுள்ளது. அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்துள்ளனர். பாழடைந்து இருந்த கட்டடத்தில் பையுடன் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் சோதனை செய்ததில், தயாளன் வீட்டில் திருடிய 4.5 பவுன் நகை, ரூ. 40,000 மற்றும் செல்போன் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன் (30) என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும், இவருடைய காதலியைத் திருமண செய்து கொண்டு வசதியாக வாழ்வதற்குத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் திருட்டு தொழில் செய்து வந்ததும் அவர் மீது சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சேலத்திலிருந்து புதுச்சேரி வந்த கோடீஸ்வரன் உள்ளூர் பேருந்து மூலமாக காலாபட்டிற்க்கு வந்து தயாளனின் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு பின்னர் ஜன்னலை உடைத்து நகை பணம் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நகை பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு 12 மணி நேரத்தில் திருடனைப் பிடித்த காவலர்களை டி.ஐ.ஜி பிரேஜேந்திர குமார் யாதவ் பாராட்டினார்.